சென்னை தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்(33). இவர் கடந்த 3 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி ஜிபி சாலையிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணேஷ், ரூ.1.40 லட்சம் நிர்வாக பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனம் கணேஷை பணி நீக்கம் செய்தது. இருப்பினும் அவரிடம் நிர்வாக ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 14) மாலை கணேஷ் விசாரணைக்காக தனது அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்குள்ள கழிவறைக்கு சென்று தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி கணேஷ் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கழிவறையின் கதவை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் கணேஷ் அதற்குள் உயிரிழந்து விட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நண்பர் போல பேசி தொழிலதிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடி