சென்னை பல்லவன் நகர் காலி மைதானத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்றை மதுரவாயல் காவல் துறையினர் கண்டு எடுத்தனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் எரிக்கப்பட்டிருந்த உடல் ஜெகநாதன் என்பது தெரிய வந்தது. மேலும் இவரை மதுரவாயலைச் சேர்ந்த சத்யராஜ், முருகன், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
முருகன் மனைவிக்கும் ஜெகநாதனுக்கு இடையே திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததால் ஆத்திரமடைந்த முருகன் சம்பவத்தன்று, ஜெகநாதனை வரவழைத்து மது அருந்த வைத்துள்ளார். பின்னர் சத்யராஜ், முருகன், சதீஷ்குமார் மூன்று பேரும் இணைந்து ஜெகநாதனை அரிவாளால் வெட்டி, கொலை செய்து, மறைக்க பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் மூவரும் பிணையில் வெளிவந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி முன்பு இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் கருணாகரன் ஆஜராகி திட்டமிட்டு கொலை செய்தது, அதை மறைக்க எரித்தது என நடைபெற்ற குற்றங்கள் குறித்த வாதத்தை முன்வைத்தார். விசாரணை முடிவில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : தீபம் பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து!