சென்னை: போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்யும் நோக்கத்திலும், சாலை விதிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் 'டிராஃபிக் வார்டன்ஸ்' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2,000 மாணவர்கள் காவல் துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்மூலம் பயிற்சி பெற்று சிறப்பாக செயல்பட்ட பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் குமார் சாரட்கர் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். சேத்துப்பட்டு எம்.சி சி. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு, செய்தியாளர்களை சந்தித்த கபில் குமார் சராட்கர், போக்குவரத்து போலீசார் பல வேளைகளில் ஈடுபடுவதால், அந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள டிராஃபிக் வார்டன் அமைப்பு உருவாக்கியதாகவும், 300 பேர் வார்டன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு வெளியே போக்குவரத்துப் பணிகளை Road Safety Patrol பணிகளை மாணவர்கள் மேற்கொள்வதால், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை டிராஃபிக் வார்டன் அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். 350 பள்ளிகள் 20,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 11 இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்துள்ளோம். அதில் 9 மாற்றங்கள் பலன் கிடைத்து இருப்பதாகவும், 2 மாற்றம் சோதனை முறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 90 விழுக்காடு பொதுமக்கள் பலனடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரத்தைக்குறைக்கும் வகையில் 3 சிக்னல்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 'நோ ஹான்கிங்' முறையில் 2.3 லட்சம் பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'18 வயதுக்குட்பட்டோர் பைக் ஓட்டுவது, இளைஞர்கள் பைக் ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களில் ஈடுபடுவது தற்போது குறைந்து உள்ளது. கடந்த காலங்களில் காவல் துறை எடுத்த தீவிர நடவடிக்கை, அதன் மூலம் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதம் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கிய ஜாமீன் போன்ற நடவடிக்கைகளால் இவை சாத்தியமாகி இருக்கிறது' எனவும் தெரிவித்தார்.
மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்த 'ஹேப்பி ஸ்டிரீட்ஸ்' என்ற திட்டத்தை அமல்படுத்தி, முதலாவதாக நாளை அண்ணா நகர் 2வது அவென்யூவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஸ்கேட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாகனங்களில் வித்தை காட்டும் இளைஞர்கள்; விபத்து அச்சத்தில் மக்கள்