சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியில் நடந்துச் செல்லும் பெண்களை வழிமறித்து தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது குறித்து பொதுமக்கள் சார்பில் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தனிப்படை காவலர்கள் வழிப்பறி நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கார்த்தி(28) என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த கார்த்தியை காவலர்கள் இன்று (நவ. 29) மாலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கொரட்டூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொரட்டூர் 200 அடி சாலை, விவேகானந்தா நகர் ஆகிய இடங்களில் இரு பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், 10 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கார்த்தியை கைது செய்த காவல்துறையினர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.