சென்னை: சென்னையைச் சேர்ந்த 36 வயதான பெண் திருமணமாகாத நிலையில், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவருக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு முகநூலில் ஜான்சன் அருள்மாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜான்சன் அருள்மாறன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பணக்காரர்போல புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே, இந்தப் பெண்ணுக்கு ஜான்சன் உடன் காதல் ஏற்பட்டு, நாளடைவில் ஜான்சன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
இதனிடையே, ஜான்சன் சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும், தொழிலை பெருக்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி, பல தவணைகளில் அப்பெண்ணிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 19 கிராம் தங்க நெக்லஸ் ஆகியவற்றை பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜான்சன் வீட்டிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்றபோது, அந்த வீட்டில் வேறொரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இவர், இது குறித்து அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் விசாரித்ததில், அப்பெண்ணைப் போல அந்தப் பெண்ணையும் ஜான்சன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி இருந்ததும், மேலும், அவர் வீடு என அந்த பெண்ணின் வீட்டை காண்பித்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ஜான்சனிடம் கொடுத்த 10 லட்சம் பணம் மற்றும் 19 கிராம் நெக்லஸை கேட்டபோது, நெருக்கமான புகைப்படங்களை வைத்து ஆபாசமாக பேசி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண், ஜான்சன் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர், பெரும்பாக்கம் பெர்ன் பிளாக் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் அருள்மாறன் என்பவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜான்சன் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பதும், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதும், அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் விதவிதமான போஸ்களில் போட்டோக்களை அப்லோடு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர், சமூக வலைதளங்களில் திருமணமாகாத அதிக வயது மதிப்புடைய பெண்களை குறிவைத்து தனது காதல் வலையில் விழ வைப்பதும், அதிலும் நல்ல சம்பளம் வாங்கும் பெண்களை மட்டுமே காதல் வலையில் விழ வைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
பின்னர், காதல் வலையில் விழும் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, லட்சக்கணக்கில் பணம் கறந்து, பின்னர் ஜான்சன் அப்பெண்களை கழட்டி விடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், மோசடி செய்யப்பட்ட பெண்கள் போலீசாரிடம் சென்றால் நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி ஜான்சன் மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே போன்று 10க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களை ஏமாற்றி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜான்சன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Fake Passport: போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரம்: சென்னையில் மேலும் ஒருவர் கைது!