சென்னை: பாரிமுனை அருகே வசித்து வரும் 40 வயதான வடமாநில பெண், பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீடு புகுந்த வாலிபர் ஒருவர், ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பின்னர் தான் கூச்சலிட்டதால் அந்த வாலிபர் தப்பியோடி விட்டதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பழைய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன்(26) பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவியில் பதிவான முக அடையாளங்களை வைத்து பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் உள்ள விடுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 4 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். சென்னைக்கு வந்த ராஜேஷ் கொடுங்கையூர் பகுதியில் தங்கி அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
பெண்கள் மீது அதிக மோகம் கொண்ட ராஜேஷ் கண்ணன், இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களின் வீட்டை நோட்டமிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையடுத்து நோட்டமிட்ட வீட்டில் மறுநாளே புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு செயின் மற்றும் பணத்தை பறித்துவிட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதேபோல் சென்னையில் கொடுங்கையூர், மாதவரம் பால் பண்ணை, திரு.வி.க.நகர் மற்றும் கோவை மாநகரம் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட இடங்களில் டீ மாஸ்டராக பணியாற்றிய ராஜேஷ் கண்ணன், அந்த பகுதியில் தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டை நோட்டமிட்டு பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரு.வி.க.நகர் பகுதியில் இது போன்ற வழக்கு ஒன்றில் கைதான ராஜேஷ் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதனால் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக ராஜேஷ் கண்ணன் பூக்கடை பகுதியில் விடுதியில் தங்கி வந்த போது, அங்கு நோட்டமிட்டு வீடு புகுந்து வடமாநில பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜேஷ் கண்ணன் மீது திரு.வி.க.நகர், மாதவரம் உட்பட பல காவல் நிலையங்களில் 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி...