சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இளைஞர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி பைக் ரேசில் ஈடுபட்டு வருவதாக, காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதில், குறிப்பாக மெரினா கடற்கரை சாலை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஓஎம்ஆர் நெடுஞ்சாலை, கோயம்பேடு மேம்பாலம் சந்திப்பு, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகளை, பைக் ரேஸ் ஓட்டும் விதமாக. இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி காலை, பாரிமுனை ராஜாஜி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.
ரேஸில் ஈடுபட்டவர்களின் வாகன எண்ணை வைத்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சாருகேஷ் (21), சையது ஷரூன் ரஷீட் (20), ஜெகதீஷ் (23) ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சாருகேஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், சையது ஷருன் ரஷீத் வேலையில்லாமல் இருந்து வந்ததும், ஜெகதீஷ் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் சினிமா பாணியில் தங்களுடைய விலையுயர்ந்த பைக்கில் ரேசில் ஈடுபட்டு வெற்றி பெறுபவருக்கு தோல்வியடைபவரின் பைக்குகள் சொந்தம் என பந்தயம் கட்டி ரேஸ் ஓட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவர் கைது