சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து, புகார்களுக்கு பதில் பதிவு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 25) சென்னை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தை டேக் செய்து ஒருவர், புகாருடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தாறுமாறாக வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூரு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இதனைக் கண்ட காவல் துறையினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு இருசக்கர வாகன யாருடையது என்பதை கண்டறிந்தனர்.
அந்த வாகனம் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மணிபால் என்ற இளைஞரின் வாகனம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞர் மணிபாலை காவல் நிலையம் அழைத்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது நண்பர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் முன் எழுதி வாங்கிய காவல் துறையினர், மணிபாலை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், வாகனத்தில் சென்ற மூவரையும், அவர்களது பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி காவல் துறையினர் மணிபாலிடம் கூறிவிட்டனர்.
ஆனால் , இதுவரை காவல் துறை முன்பு அந்த இளைஞர் ஆஜராகததால் அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனை: மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை