தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உடன் 2001ஆம் ஆண்டு திமுக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களைப் பிடித்த நிலையில் பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக உடன் கூட்டணி அமைத்து அதே 4 இடங்களைப் பிடித்து தமிழ்நாடு சட்டப்பேரவை சென்றுள்ளது.
கட்சியின் வாக்கு விழுக்காடு 2 விழுக்காட்டை தாண்டவில்லை. வட இந்தியாவில் அசுர பலத்துடன் கால் ஊன்றிய பாஜகவால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற பாஜகவின் கனவு பலிக்கவில்லை.
கொங்கு பகுதியை வலுப்படுத்துகிறதா பாஜக
கொங்கு பகுதியிலும், கன்னியாகுமரியிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்று வரும் நிலையில், கொங்கு பகுதிக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், கட்சியை மீட்டெடுத்து புது ரத்தம் பாய்ச்சுவதற்காக அதே பகுதியை சேர்ந்த இளம் தலைவர் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவராக தேசியத் தலைமை நியமனம் செய்து உள்ளது.
ஆகஸ்ட் 25இல் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக உறுப்பினராக டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித் ஷா முன்னிலையில் இணைந்த நிலையில் ஒரு ஆண்டிற்கு உள்ளாகவே 37 வயதான அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
விவசாயி முதல் பாஜக உறுப்பினர் வரை
தெற்கு பெங்களூருவின் துணை ஆணையராக 2019ஆம் ஆண்டு, பதவி வகித்து வந்த அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயப் பணிகளைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
ரஜினி கட்சித் தொடங்கினால் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில்,நம்பிக்கை தராத ரஜினியின் நகர்வால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார், அண்ணாமலை. ஆரம்பகாலம் முதலே ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர்.
பாஜக தேசியச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் ஆதரவுடன் அவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதிய சவால்கள் என்னென்ன?
நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்குப் பெற முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
- இந்த நிலையில் புதிய தலைவர் நீட் தேர்வு குறித்து என்ன நிலைப்பாடு எடுக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தமிழ்நாடு கட்சிகள் அனைத்தும் ஒரே புள்ளியில் உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக நீட் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்து வருகிறது. கொங்குநாடு விவகாரத்தில் கட்சியில் இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், கொங்கு பகுதியைச்சேர்ந்த அண்ணாமலை இது குறித்து தனது ஆதரவைத் தருவாரா என்ற கேள்வி எழுகிறது.
- கர்நாடக ஐபிஎஸ் அலுவலராக விருப்ப ஓய்வு பெற்று உள்ள அண்ணாமலை, கன்னட மொழி சரளமாக பேசக்கூடியவர், பெருமைக்குரிய கன்னடன் எனப் பேசியவர். தமிழ்நாட்டிற்கு ஆதரவான நிலை எடுப்பாரா அல்லது நடுநிலை காப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- இளம்தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸிற்கு சற்றும் குறைவில்லாமல் கோஷ்டி பூசல் நிறைந்த கட்சியாக, தமிழ்நாடு பாஜக இருக்கிறது.
- இக்கட்சியில் மூத்தத் தலைவர்களை அண்ணாமலை எவ்வாறு அரவணைத்துச் செல்ல இருக்கிறார். கட்சியின் முக்கியப் பிரச்னைகளின்போது, அவரது உத்தரவு கடைக்கோடி தொண்டன் வரை சென்றடையுமா என்னும் ஆர்வம் எழுந்துள்ளது.
தென்தமிழ்நாடு, டெல்டா, சென்னை போன்ற பகுதிகளில் பாஜக அதலபாதாளத்தில் உள்ளது. பாஜகவின் கொள்கை கோட்பாடு இவ்விடங்களுக்குச் சென்றடைய வேண்டும். வாக்கு விழுக்காடு எண்ணிக்கையை இப்பகுதிகளில் உயர்த்த வேண்டும்.
வாக்கு விழுக்காடு உயருமா?
2009ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடந்து உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 விழுக்காடு பெற்ற நிலையில், சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு 6.85 விழுக்காடு பெற்று வளர்ந்து உள்ளது.
ஆனால், பாஜக கூட்டணி அமைத்துகூட 2.2 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளது. கட்சியின் வாக்கு விழுக்காடை உயர்த்த வேண்டிய கட்டாயம் தற்போதைய இளம் தலைவர் அண்ணாமலைக்கு உள்ளது.
மேலும் இளம் வாக்காளர்கள், கிராமப்புற வாக்காளர்கள் ஆதரவு போதிய அளவில் கிடைக்கவில்லை. அதனால் இளம் வாக்காளர்களைக் கவர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவிற்கு புது ரத்தம் பாய்ச்சி மீட்டெடுப்பாரா என்பது வரும் காலத்தில் தான் தெரிய வரும்.