சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார் (29). இவர், அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.15) செந்தில்குமார் பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார்.
பின்னர், மது போதையில் இன்று (பிப்.16) அதிகாலை 2 மணியளவில் அண்ணாநகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள உணவகங்கள் உள்ள ஃபுட் கோட்டிற்கு வந்து உணவருந்தினர். நண்பர்கள் ஹோட்டலின் உள்ளே உணவு அருந்திக் கொண்டிருந்த நிலையில் செந்தில்குமார் மட்டும் ஹோட்டலின் வெளியே வந்து, ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பிரகாஷ் என்பவருடன் செந்தில்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து அருகில் இருந்த பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன், ரோஷன் ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதனைக்கண்ட செந்தில்குமாரின் நண்பர்களும் எதிர் தரப்பினரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டு, நுரையீரலில் உள்காயம் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர், பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் ஆன்லைன் மூலம் ஹைடெக் விபச்சாரம்.. 2 பெண்கள் உட்பட மூவர் கைது!