சென்னை: தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர், காளீஸ்வரி என்பவர் நேற்று (டிச.04) தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கூடுவாஞ்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறிய வடமாநில இளைஞர் ஏறிய உடனேயே இறங்கியுள்ளார்.
இதனை அங்கிருந்த பெண் காவலர் பார்த்துள்ளார். அந்த இளைஞரும் காவலரைப் பார்த்த உடனேயே ஓட்டம் பிடித்தார். இதனால், சந்தேகமடைந்த காவலர், சுமார் அரை கி.மீ., தூரம் வரை சினிமா பாணியில் அந்த இளைஞரை விரட்டி சென்று பிடித்தார். அப்போது, பாக்கட்டில் விலை உயர்ந்த 76ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்துபோது அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டோ (18) என்பதும்; பேருந்தில் பயணி ஒருவரிடம் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற அவர், அங்கு விசாரணை நடத்தினார்.
பின்னர் சிறிது நேரத்தில் செல்போனைப் பறிகொடுத்த மாயவேல் (30) என்பவர், அதே செல்போனுக்கு போன் செய்து, 'பேருந்தில் யாரோ எனது பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த போனை திருடிவிட்டதாக' தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது.
இரவு நேரத்தில் தைரியமாக செல்போன் திருடனை வெகு தூரம் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த காவலர் காளீஸ்வரியை, தாம்பரம் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட காவல் துறையினர் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: அமைச்சர் வீடு அருகே திருட்டு.. பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை!