சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை என்.டி.பி பில்டிங் பின்புறமாக இன்று காலை 6.30 மணியளவில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக திரிந்து கொண்டிருந்துள்ளார். இவரை கண்ட மருத்துவமனை காவலாளி ஒருவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புளியந்தோப்பு கனகராஜ் முதலியார் தோட்டத்தை சேர்ந்த சலீம்(22) என்பது தெரியவந்தது.மேலும் இவர் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை இடுப்பில் மறைத்து வைத்து கொண்டு சுற்றி திரிந்தும் தெரியவந்தது.
அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த காவல் துறையினர், யாரையாவது கொலை செய்வதற்காக கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.