சென்னை: அடையாறு பகுதியில் அதிகாலையில் 4 மணி அளவில் அடையாறு பாலத்திலிருந்து மெரினா நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம், ஸ்பீட் பிரேக்கை கவனிக்காமல் சென்றதால் அதிலிருந்த இளம் பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (25). இன்று அதிகாலையில் தனது தோழிகளான திருச்சியைச் சேர்ந்த தமிழரசி (22),திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகிய மூவரும் கிளப் ஹவுஸ் என்ற செயலி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் நண்பர்களாகி உள்ளனர்.
பிரவீனுடைய இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை தமிழரசி ஐஸ்வர்யா ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.பிரவீன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டியுள்ளார். அப்பொழுது அடையாறு பாலத்தை தாண்டி அடுத்துள்ள ஸ்பீடு பிரேக்கை கவனிக்காமல் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
டெம்போ மீது மோதி விபத்து: இதில் தலையில் பலத்த காயமடைந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரவீன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த பிரவீனுடைய இருசக்கர வாகனம் முன்னால் சென்றுகொண்டிருந்த குட்டி யானை வாகனத்தின் மீது மோதி அதன் காரணமாக சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது.
விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டியானையை ஓட்டி வந்த ஓட்டுனர் இந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீனும், ஐஸ்வர்யாவும் மயக்கநிலையில் இருப்பதால் விபத்து குறித்து முழுமையான விசாரணையை போலீசாரால் நடத்த முடியவில்லை.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!