நோய்களை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் மரபு வழியாக வரும் ஒரு சில நோய்களுக்கு முழுமையாக சிகிச்சையளித்து கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற நோய்களை முழுமையாக தடுக்கவும் கட்டுப்படுத்தவும் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை முறை பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அதனடிப்படையில், சென்னையில் அறிஞர் அண்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. ஆனாலும் அங்கு குழந்தைகளுக்கென தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அவ்வாறு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சிகிச்சையளிக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையுடன் அவர்களுக்கு மனத்திறனை வலுப்படுத்தும் வகையில் இயற்கை முறையில் சிகிச்சை மற்றும் யோகா கற்றுத் தரப்படுகிறது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் யோகாவுடன் சேர்த்து இயற்கை மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில், நீர் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவி குளியல், முதுகுத் தண்டு குளியல் உள்பட பல சிகிச்சைகள் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவருகிறது.
இங்கு தினமும் 70 முதல் 90 குழந்தைகள் இந்த சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுவருகின்றனர். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளின் பெற்றோரின் மனஅழுத்தம், மனச்சோர்வை குறைக்க அவர்களுக்கும் யோகா பயிற்சி, இயற்கை மருத்துவ முறையில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர்.
இது குறித்து மருத்துவ அலுவலர் லதா கூறுகையில், "இதயக் கோளாறு, நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, நீரிழிவு நோய், தைராய்டு, நரம்பியல், வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இந்த இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சையளிப்பதால், குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் வலிமை பெறுகின்றனர். மரபு வழியாக ஏற்படும் நோய்களுக்கு பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் வருவதைக் கட்டுப்படுத்த முடியும். வயது வரம்பை கணக்கிட்டு, குழந்தைகளுக்கு யோகா, சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதனைக் கற்றுக்கொள்ள சிரமப்படும் குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி அளிக்கப்படும். இந்தச் சிகிச்சைகள் மூலம் குழந்தைகளின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கென பிரத்யேகமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆசியாவிலேயே முதன் முறையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவர்கள் விவேகா, சபிதா கூறுகையில், "மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிக்க முடியும். உடலில் உள்ள நாடிகளில் முக்கியப் பகுதிகளில் ஏற்படும் அழுத்தத்தினை சரி செய்வதன் மூலம் நோயினை குணப்படுத்த முடியும்.
உடலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதுதான் நோய்கள் வருவதற்கான முதல் காரணம். யோகா அளிக்கப்படும்போது குழந்தைகளின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது" என்றனர்.
இதையும் படிங்க: காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!