அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ம.தி.மு.க சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "அண்ணாவின் வாழ்க்கையை போற்றுகிற இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன், பெருந்தலைவராக திகழ்ந்தவர் அண்ணா. அவரைப்பற்றி நேரடியாக அறிய முடியாவிட்டாலும் அவரின் தலைமைப் பண்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
எளிய குடும்பத்தில் பிறந்து அயராது உழைத்து மக்களின் பேராதரவைப் பெற்றவர் அவர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உரிய காலம் வந்த போது தமிழ்நாட்டின் மாபெரும் முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்று அவர் கூறியதை இன்று, பேசியிருந்தால் அவரை தேசத் துரோகி என்று கூறுவார்கள்.
வைகோ என்னை எப்போது அழைத்தாலும் நான் வந்து நிற்பேன். அவர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிய போதும் நான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஃபரூக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத சூழலில் அமித் திரிவேதியால் வரமுடியவில்லை. ஆனால் மக்களின் மீதுள்ள அன்பினால் நான் வந்திருக்கிறேன்.
நான் என்னுடைய உடல்நிலையை பரிசோதித்துக் கொள்வதில்லை. என்னை கொலை செய்ய வருபவர்கள் என் வலிமையை பரிசோதித்து கொள்ளட்டும் என்று இலக்கியம் கூறுவதை போல், நான் எதற்கும் அஞ்சாமல் காஷ்மீர் சென்று என் நண்பனை சந்திப்பேன்.
டில்லியில் இன்று ஆட்சி செய்பவர்களுக்கு இந்திய மக்கள், கலாசாரம் பற்றியெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அதிகாரம் மட்டும் தான். வாஜ்பாய் ஆட்சி செய்தபோது வைகோ, கலைஞர், ஃபரூக் அப்பதுல்லா என்று அனைத்து பக்கத்திலிருந்தும் தலைவர்கள் உடனிருந்தனர்.
இன்றைய பா.ஜ.க. வாஜ்பாயின் பா.ஜ.க அல்ல, மாறாக குண்டர்களின் பா.ஜ.கவாக இருக்கிறது. இந்த இருண்ட சூழலுக்கு மத்தியிலும் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கருத்து சுதந்திரம் காப்பாற்றப்பட்டு வருகிறது.
ரவீந்திரநாத் தாகூர் கூறியதைப் போல் நாம் தலை நிமிர்ந்து சொல்வோம் இந்தியர் என்று. 1975 நெருக்கடி காலத்தின் போதும் தமிழ்நாடு விடுதலைக்கான இடமாக விளங்கியது போலவே, தற்போது வரை அப்படியே விளங்குகிறது.
டெல்லியில் ஆட்சி செய்பவர்களின் குறிக்கோள் ஒரே மொழி, ஒரே வரி, ஒரே ஆட்சி என்பதாக இருக்கிறது. அவர்களுக்கு நாட்டின் கலாசாரத்தைப் பற்றி தெரியவில்லை. அதனால் தான் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவினுடைய பலம். இந்தியாவைப் பாதுகாக்கப்போவது அதன் பன்முகத்தன்மை தான்.
நான் இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து வருகிறேன். ஆனால் உள்துறை அமைச்சரின் கருத்தை எதிர்க்கிறேன். இந்தியை விரும்பாத எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது. அதற்கு நான் உங்களோடு நிற்பேன்.
நாம் துவண்டு விடமாட்டோம். இந்த நாட்டின் உரிமையை மீட்டெடுக்க பாடுபடுவோம். நான் பாகிஸ்தானின் நண்பன் அல்ல. இது எங்களுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள பிரச்னை. காஷ்மீர் மக்களின் உரிமையை பாகிஸ்தானின் உதவி இல்லாமல் நாங்கள் காப்பாற்றுவோம் என்று ஒரு என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
ஹரியானா, மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் அந்த மாநிலங்களின் பிரச்னை குறித்து பேசுவதில்லை மாறாக காஷ்மீரில் ரத்து செய்த 370 சட்டத்தை பற்றி பேசுகின்றனர்.
இன்னும் சில நாள்களில் காஷ்மீரில் நிலைமை சரியாகவில்லை என்றால், "தமிழ்நாட்டு மக்கள் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீநகர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு காஷ்மீர் மக்களை விடுவிக்க போராட வேண்டும் என்றும் நான் உங்களை கேட்டுக்கொள்வேன்" என்று தெரிவித்தார்.