சென்னை: அடுத்து வியாசர்பாடி மெகசின்புரம் பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம் (73). இவர் அதே பகுதியில் வியாசை என்ற பெயரில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜா எம்.கே.பி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ராஜா காரைக்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்ற நிலையில் அவரது தந்தை பன்னீர்செல்வம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மேலும் பன்னீர் செல்வத்திற்கு கொடுங்கையூர் , வியாசர்பாடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் சொந்தமாக வீடு உள்ளது.
பிராட்வே பகுதியைச் சேர்ந்த கலா(45) என்பவர் பன்னீர்செல்வத்திற்கு வாடகை வசூல் செய்து கொடுப்பதுடன் அவரது வீட்டு பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வத்திற்கு அவரது மகன் ராஜா போன் செய்தபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்த நிலையில் நேற்று இரவு காரைக்குடியிலிருந்து சென்னை திரும்பிய ராஜா, உடனே தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் சென்று பார்த்த போது பன்னீர்செல்வம் கழுத்து, விலா எலும்பு , பின்பக்க தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் 27ஆம் தேதி பன்னீர்செல்வம் தனது மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பல் மருத்துவர் யுவராணிக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி கலாவிடம் ரூ.70 ஆயிரம் பணம் வாங்கியது தெரியவந்தது.
மேலும் பன்னீர்செல்வம் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட யாரோ சிலர், வீடு புகுந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்து விட்டு செல்போன், ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வியாசர்பாடி போலீசார் பன்னீர்செல்வம் வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை!