சென்னை : பசி பிணியிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் 1992ஆம் ஆண்டுமுதல் ஐநா சபை அக்.17ஆம் நாளை அதிகாரப்பூர்வமாக வறுமை ஒழிப்பு தினமாக ஏற்றுக்கொண்டது.
உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பாரிஸ் நகரில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது.
பசியை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச்சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது.
உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும், அதில் பாதி பேர் தெற்காசியாவிலும், நான்கில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா.சபை தெரிவிக்கின்றது.
வறுமையின் வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே இன்னொருவருக்கு உதவ முடியும். இன்று உலக வறுமை ஒழிப்பு தினம். வறுமை ஒழிய முன்னோக்கி பயணிப்போம்!
இதையும் படிங்க : வரலாற்றில் மறைக்கப்பட்ட 1857 ஹிசார் புரட்சி!