சென்னை: தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”கரோனா காலத்திற்குப் பிறகு அறிவியல் செய்திகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து இதழ்களிளும் முதல் பக்க செய்தியாக உள்ளது. கரோனா வைரஸ் குறித்து நமக்கு இன்னும் முழு தகவல் இல்லை. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் நமக்குப் பெரிதும் உதவும்.
ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்
உலக சுகாதார மையம் இன்போ டைமிக் என்பதைப் பற்றிப் பேசி வருகிறோம். பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. கரோனா தொற்றின் காரணமாகப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி கிடைக்கப் பெறவில்லை. ஆசிரியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்தாலும், இன்னும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்“ என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், ”இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 68 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதாலும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. கடந்த ஓராண்டிற்கு முன்னர் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் முழுமையாகத் தெரியாமல் இருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
தற்போது தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணி முதலில் முதியவர்களுக்குதான் ஆரம்பித்தோம். தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்தால், 3ஆவது அலை ஏற்படாமல் கட்டுக்குள் வைக்க முடியும்.
கரோனா வைரஸ் பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வைரஸ் நோய்களுடன் தான் வாழ முடியும் என்பதால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையில்லை. உலக சுகாதார நிறுவனம் பலமுறை இதை வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம்
18 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையிலும் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், அதனால் பெரிதாக பாதிப்பு இருக்காது. குழந்தைகள் பள்ளிகளை விட மால்கள் உள்ளிட்ட பிற பொது இடங்களுக்குச் செல்வதால் தான் சமுதாயப் பரவல் மூலம் கரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்குச் செல்வதால் தான் கரோனா பரவுகிறது என்பது தவறான தகவலாக உள்ளது.
பைசர், மார்டினோ உள்ளிட்ட இரண்டு வகையான தடுப்பூசிகள் தான் உலகளவில் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது பற்றி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இணையதள இணைப்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை ஒரு ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம்” எனக் கூறினார். இதனிடையே பள்ளிகள் திறக்கப்படாலும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை. அப்படி மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு