சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் அரசுக்கு சொந்தமான வேகன் நிறுவனம் ஒன்று பல ஆண்டாக மூடி கிடக்கிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பழைய இரும்பு மற்றும் ராட்சத இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குப்தாஜி என்பவர் செய்து வருகிறார் .
இவரிடம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகாவை சேர்ந்த மாரிமுத்து (24) உள்பட சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மாரிமுத்து, அங்கு 50 அடி உயரத்திலுள்ள மேற்கூரை மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அந்த கூரையின் ஆஸ்பெடாஸ் சீட் உடைந்ததில் கீழே விழுந்தார். இதில், அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனையடுத்து, அவரை சக தொழிலாளிகள் மீட்டு பட்டாபிராம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரிமுத்து இறந்தாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டாபிராம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுவதால் கால் தவறி இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாது இருக்க சமந்தப்பட்ட அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு பணியின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.