சென்னை : பெரியார் திடலில் செயல்பட்டு வரும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் இன்று (மே29) ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மதம் மறுப்பு திருமணம் செய்ய விரும்புவோர், துணையை இழந்தவர்கள், மனமுறிவு பெற்றவர்களுக்கான இணை தேடும் நிகழ்ச்சியும், புதிதாக வரன் விரும்புபவர்களும் பதிவு செய்து தங்களுக்கான இணைய தேடுவதற்காக மன்றல் வரன் தேடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இணையைத் தேடுவதற்காக பதிவுச் செய்தனர். அவர்களுக்கான இணை தேடல் நிகழ்ச்சி பெரியார் திடலில் நடைபெற்றது. மேடையில் பதிவு செய்தவர்கள் தாங்கள் எவ்வாறு இணையை விரும்புகின்றனர் என்பது குறித்து விளக்கினர். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் யாரும் ஜாதகம் தேவை இல்லை எனவும், தாங்கள் ஜாதியை மறுத்து வேறு சாதியில் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்து மன்றல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இசைப்பிரியன் கூறும்போது, “பெரியார் சுயமரியாதை திருமணம் நிலையத்தின் சார்பில் மன்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இணையைத் தேட விரும்புபவர்கள் பங்கேற்று தங்களுக்குரிய இணையத் தேடிக்கொள்ளலாம். மேலும் மணமுறிவு பெற்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை அளித்தால் மட்டுமே அவர்களை இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
இதில் பதிவு செய்ய ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கான இணையர் கிடைக்கும்வரை தொடர்ந்து தேவையான உதவிகள் செய்து தரப்படும். ஏற்கனவே நடைபெற்ற மன்றல் நிகழ்ச்சியின் மூலம் பலர் தங்களுக்கு உரிய இணையரை தேர்வு செய்துள்ளனர். மேலும் பல்வேறு நபர்கள் சென்னைக்கு வருவதற்காக எங்களை தொடர்பு கொண்டனர். அந்தந்தப் பகுதிகளில் மன்றல் நிகழ்ச்சி நடத்தும்போது கலந்துகொள்ளமாறு அறிவுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சேர்ந்த ஆசிரியை டார்வி கூறும்போது, “ தனக்கு 50 வயது ஆகிவிட்டது. எனக்கு தேவையான துணையை தேடுவதற்காக இங்கு பதிவு செய்துள்ளேன். சமூகத்தில் துணையை இழந்த ஆண்கள் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறுகின்றனர் ஆனால் பெண்கள் அவ்வாறு செய்து கொள்ளக் கூடாது என கூறி வருகின்றனர் பெரியார் கொள்கையின்படி எனக்கு துணையாக வர விரும்புவோர் தேடுவதற்காக இங்கு பதிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
எம்பிபிஎஸ் மருத்துவம் படித்த மாணவி ரேமா கூறும்போது , “தனக்கு பெரியார் கொள்கை பிடிக்கும். நான் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்புவதால் இங்கு பதிவு செய்துள்ளேன் என்னை விரும்புவார் தொடர்பு கொண்டால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். எனது தாய் தந்தையரும் ஜாதி மறுப்பு திருமணத்தையே விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் கிரைப்பட்டி அம்பேத்கர் நகரைச் சார்ந்த ராமன் அருள்மொழியின் இளையமகள் இளைய குமாரி மற்றும் தர்மபுரி மாவட்டம் சக்தி பட்டி வடிவேல் வள்ளியம்மாளின் மகன் ஹரிபந்த் ஆகியோருக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் பூங்குன்றன் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து பேசிய இளைய குமாரி, ஹரிபந்த் கூறும்பொழுது, “ பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் இருவரும் மனதளவில் ஒப்புக்கொண்டதால் இந்த திருமணத்தை பெரியார் திடலில் நடத்துகிறோம். பெண் அடிமைத்தனத்தை தற்போதும் சமூகத்தில் கடைபிடித்து வருகின்றனர். திருமணம் செய்யும்போது நாய்களுக்கு டோக்கன் கட்டுவதுபோல் தாலி கட்டுகின்றனர். தாலிகட்டி இவள் எனக்கு மட்டும் உரியவள் என கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை எனவே சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையும், 360 டிகிரி கோணமும்.. டிரெண்டிங் காரணம் என்ன?