அடையாறில் இருக்கும் ராஜாஜி பவனில் உள்ள மத்திய உளவுத்துறையில் பணிபுரிபவர் ஹரிஸ்குமார். இவரது மனைவி 23 வயதான நிகிதா. விசாகபட்டினத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. பெசன்ட் நகர் பஜனை கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவன் - மனைவி வசித்து வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி படுக்கையறையில் நிகிதா தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது படுக்கையறையில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அதில் "இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று எழுதி நிகிதா என கையெழுத்திடப்பட்டுள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவம் நடந்த அன்று பெண்ணின் கணவரான ஐ.பி அதிகாரி ஹரிஸ்குமாரும், அவரது தாயார் ரமணியும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார், திருமணம் நடந்து ஒரு வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து திருமங்கலம் ஆர்.டி.ஓ முதல்கட்ட விசாரணையை நடத்தி உடற்கூராய்வு முடிக்கப்பட்டு உயிரிழந்த நிகிதாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட நிகிதா பி.டெக் படித்துள்ளார். ஐ.பி அலுவலரான ஹரிஸ்குமாருக்கும் நிகிதாவுக்கும் இரு வீட்டிலும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மதம் ஒரு தடையல்ல என மணமகன் வீட்டார் முடிவெடுத்ததால் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்கு பிறகு மணமகனின் பெற்றோர் நிகிதாவை மதம் மாற சொல்லி வற்புத்தியதாகவும், வரதட்சணை தொகையில் 17 லட்சம் ரூபாய் பெற்றது போக மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு நிகிதா தனது பெற்றோர் வீட்டில்தான் வசித்து வந்துள்ளார். பின்னர், கடந்த மாதம் நிகிதாவை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி மணமகன் ஹரிஸிடம் விட்டுள்ளனர். ஹரிஸின் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் வசித்துவரும் நிலையில், ஹரிஸின் தாயார் ரமணி மட்டும் மகன் - மருமகளை பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளார். ஹரிஸும், அவரது தாயாரும் வீட்டில் இருக்கும்போது இந்த தற்கொலை நடந்திருப்பதால் வரதட்சணை கொடுமை நடந்திருப்பதாக பெண் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த போலீசார், வழக்கு தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணைக்கான பரிந்துரை ஆவணங்களை எடுத்துச் சென்ற சாஸ்திரி நகர் பெண் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசி அவமதித்தாக திருமங்கலம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட நிகிதாவின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். ஆனால் அந்த மருத்துவமனையின் பிணவறையில் பராமரிப்பு பணி நடப்பதால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் கிண்டி ஆர்.டி.ஓ விசாரிக்காமல், திருமங்கலம் ஆர்.டி.ஓ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு விசாரணை அலுவலரான உதவி ஆய்வாளர் பாரதி, திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது காவல் துறை சீருடையில் இருந்த தன்னை, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், அலுவலகத்தில் ஆர்.டி.ஓ இல்லை ஏன் அலுவலகத்திற்கு உள்ளே வருகிறாய்? என ஒருமையில் பேசி அவமதித்ததாக காவல் பெண் உதவி ஆய்வாளர் பாரதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வரதட்சனை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாரா என சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலக வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனின் அலைக்கழிப்பால் விசாரணை தாமதமானதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.