சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்வாக, திமுக மகளிர் அணி சார்பாக சென்னை நந்தனத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில் திமுக அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மகளிர் உரிமை மாநாட்டில் உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிம்பிள் யாதவ் பேசுகையில், "எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அதிகரித்தவர் கருணாநிதி. மேலும், சமூக நீதிக்காகவும் பெண் உரிமைக்காகவும் இடைவிடாத போராட்டம் மேற்கொண்டவர் கருணாநிதி.
மகளிர் உரிமை, பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் உரிமை என பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பெண்களின் உரிமைகளுக்காக நாடளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்பது திமுக தான். மணிப்பூர் சம்பவம் நாம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அங்கு பெண்களுக்கு நடந்த கொடுமைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவை.
மேலும், மோடி ஆட்சியில், இந்தியா பின் நோக்கி செல்வதற்கு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவமே உதாரணம். நாடளுமன்றத்தில், சட்டமன்றத்தில், மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில், மோடி அரசு மெத்தனம் காண்பித்து வருகிறது. மக்களின் முன்னுரிமைகளை நீர்த்து போகச் செய்து வருகிறது மோடி அரசு” என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி பேசுகையில், "சமூகநீதி, பாலின சமத்துவம், பொருளாதார சமத்துவத்திற்காக போராட்டம் நடத்தும் நிலையில் நாம் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேசினார். செந்தமிழ் நாடெனும் போதினிலே என பாரதியார் கவிதையுடன் பேச தொடங்கிய சுப்ரியா சுலே, "கூட்டாட்ச்சிக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதை பாராட்ட கடமைப்பட்டு உள்ளேள். தமிழ்நாடு மற்றும் தமிழர் உரிமைக்காக தொடர்ந்து மத்தியில் திமுக குரல் கொடுத்து வருகிறது.
தமிழர்களின் பெருமை என்பது சமூக நீதி தான். ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து மொழி ஒன்றுக்கு தான் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். தமிழர்களின் உரிமை தமிழ் மொழிதான். தமிழுக்கும் மராட்டியத்திற்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. நாடளுமன்றத்தில் திமுக-வை பேச விடமால் பாஜக அமலியில் ஈடுப்பட்ட போது, கனிமொழி தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்.
எனக்கும் தமிழ்நாடிற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. தமிழகத்தில் அழகாக தாலி அணிவார்கள். குறிப்பாக நான் தமிழ்நாட்டிற்கு கடமைப்பட்டுள்ளேன். தமிழ் மொழியில் ல,ள,ழ, என இருக்கிறது. அதேப்போல் மராட்டியிலும் ல,ள என்று இருக்கிறது. தமிழும் மராட்டியும் சேர்ந்து இருக்கும்.
ஒவ்வொறு முறையும் நான் சென்னைக்கு வரும் போது, 2 கிலோ மல்லி பூ என் அம்மாவிற்காக வாங்கிக் கொண்டு செல்வேன். பெண்கள் எப்பொதும் தொடர்ந்து அவர்களுக்கு சம உரிமை தான் எதிர்பார்கள்" என்று தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி நிர்வாக குழு உறுபினருமான ராக்கி பிட்லான் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வியறிவு இன்றியமையாதது. அதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு இழைக்கபடும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது. பெண்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
பீகார் மாநில அமைச்சர் லெஷி சிங் பேசுகையில், "இந்தியாவில், பெண்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதற்கு முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி முன்னுதாரணம் ஆகும். தமிழ்நாட்டை போலவே பிகாரிலும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிதிஷ் குமார் அரசு செயல்படுத்தி வருகிறது.
33% சதவீத இடஒதுக்கீட்டுக்காக இண்டியா கூட்டணி தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இப்போதும் உடனடியாக அமல்படுத்தும் நோக்கத்தில், மோடி அரசு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வரவில்லை" என்று தெரிவித்தார்.