சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி(19), செங்கல்பட்டுவைச் சேர்ந்த கீதாஞ்சலி (19) ஆகிய இருவரும் பயிற்சி பெற்று வந்துள்ளனர். மாணவிகள் இருவரும் செங்கல்பட்டில் உள்ள சரஸ்வதியின் சகோதரி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு பல மணி நேரமாகியும், இருவரும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் தேனாம்பேட்டை எம்.ஏ கார்டன் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் சுல்தான் என்பவர், தனது மனைவி சித்ரா தேவி , அவரது இரு மகள்களை கடந்த 25ஆம் தேதி முதல் காணவில்லை எனப் புகார் அளித்தார். இதைதொடர்ந்து வரதராஜபுரம் தெருவைச் சேர்ந்த ரவிக்குமாரும் தனது மனைவி, குழந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். தேனாம்பேட்டையில் ஒரே நாளில் பெண்கள், குழந்தைகளை காணவில்லை என அடுத்தடுத்து புகார் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.