சென்னை: அயனாவரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த பிரேம் குமார் (37), பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பேப்பர் வியாபாரங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், பிரேம் குமார் நேற்று முன்தினம் (ஜன.2) இரவு இருசக்கர வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில், பிரேம் குமார் விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும், அவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை காரை ஏற்றி கொலை செய்வதற்கு, அவரது மனைவி ஷன்பிரியா என்பவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் ஷன்பிரியாவின் ஆண் நண்பர் அரிகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேம் குமாரை கார் ஏற்றி கொலை செய்த சரத் குமார் என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து, தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட அரிகிருஷ்ணன், ஷன்பிரியா இருவரிடமும் அயனாவரம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு வேலை பெற்று தருவதாக மோசடி; ராணிப்பேட்டையில் கணவன் மனைவி கைது
விசாரணையில் காரை இயக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சரத் குமாருக்கு, சுமார் 5 லட்சம் ரூபாய் ஷன்பிரியா பேரம் பேசியதாகவும், மேலும் பிரேம் குமார் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் எடுத்து, ஆண் நண்பர் அரிகிருஷ்ணனுக்கு கொடுத்து சரத் குமார் கொலை செய்த பின்னர், அவரிடம் இந்த பணத்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியதாக ஷன்பிரியா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய சரத் குமார் கைது செய்யப்பட்டது பின்பு தான் அவருக்கு முன்பணமாக ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது கண்டுபிடிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொடர் விசாரணைக்கு பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை அயனாவரத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கார் ஏற்றி கொலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் முன்பகை காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை - 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்!