சென்னை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பும், அண்ணா நகரில் உள்ள டிராவல்ஸ் பேக்கேஜ் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ரத்னேஸ்வரன், லண்டனில் உள்ள ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் 12.25 லட்சம் ரூபாய் வரை ஆறுமுகத்திடம் பெற்றுள்ளார்.
ஆனால், வேலை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த ஆறுமுகம், 2018ஆம் ஆண்டு அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளாகியும், இந்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனால், முதல்வர் தனிப்பிரிவில் ஆறுமுகம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அண்ணா நகர் காவல் நிலைய காவலர் ஒருவர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, “புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருப்பதால், விரைவாக விசாரணை நடத்த முடியாமல் போகிறது. எனவே உடனடியாக அந்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக எழுதி கொடுங்கள்” என்கிறார்.
இதற்கு ஆறுமுகம், “தற்போது முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்ததால்தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மனுவை வாபஸ் பெற்றால் மீண்டும் கிடப்பில் போடப்படும்” என கூறுகிறார். இதற்கு, “முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுவை வாபஸ் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் கிடப்பில் போடப்படும்” என மிரட்டும் தொனியில் காவலர் தெரிவிக்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்