சென்னை: அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 75 நாட்களில் 1.60 கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.
தொடர்ந்து காவிரி, மேகதாது, மாமன்னன் படம், சிறுவனுக்கு கை அகற்றம், அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில் தெளிவாக உள்ளது'' எனக் கூறினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையில் பொது சிவில் சட்டம் குறித்து, அறிக்கை எண் 21-ல் சிறுபான்மையினர் நலன் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ''இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள மத உரிமை, மதம் சார்ந்த இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என்பதால், அத்தகைய புதிய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது'' எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்புத் தெரிவிக்கின்றது என்பது தெளிவாகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போதும் அதிமுக, பாஜக கூட்டணியில் தொடர்கிறது என்ற சூழ்நிலையில் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பொது சிவில் சட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருவதன் மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்கிற உறுதிப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
மேலும், இன்று (ஜூலை 5) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என்றும், நாட்டில் சிறுபான்மையினரின் மதம், மனித உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் திருத்தம் வேண்டாம் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.