தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அன்பரசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் உயர்த்தப்பட்ட மூன்று விழுக்காடு அகவிலைப்படியை தற்போது வரை வழங்கவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 12 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொது நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியே அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எங்களின் உரிமைக்காக 2017ஆம் ஆண்டு முதல் நடத்திய போராட்டத்தை அரசு அவர்களுக்கு எதிராக பார்க்கிறது.
எனவே வரக்கூடிய 19ஆம் தேதிக்கு முன்னதாக மூன்று விழுக்காடு அகவிலைப்படி வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் வரும் 23ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் அடுத்தக்கட்ட போராட்டம் நடக்கும்" என்றார்.