சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் அதிமுக தரப்பில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுடன் இன்று (செப்.19) காலை முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன், பாஜக தரப்பில் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாமக வந்தால் மகிழ்ச்சி
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கரு. நாகராஜன், "ஊரக உள்ளாட்சி தேர்தலை அதிமுக கூட்டணியில் தான் சந்திக்கப் போகிறோம் என ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தேர்தல் நடக்கவிருக்கும் ஒன்பது மாவட்டத்திற்கும் இரண்டு மேலிட பார்வையாளர்களை கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நானும், கராத்தே தியாகராஜனும் அறிவிக்கப்பட்டிருக்கிறோம்.
இதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் தேர்தல் பணிகள் குறித்து பேசுவதற்காக இங்கு வந்தோம். மீண்டும் அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் மகிழ்ச்சி தான். தனித்துப் போட்டி என அவர்கள்தான் அறிவித்தார்கள் எனவே அதை மறு பரிசீலனை செய்தால் எங்களுக்கு அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணியின் வெற்றி என்பது முக்கியம்.
திமுகவை தோற்கடிப்பதே இலக்கு
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இலக்கு. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 44%, அதிமுக 41% என வாக்குகள் பெற்றது. வித்தியாசம் மூன்று விழுக்காடு தான். எனவே பெரிய கட்சி மீண்டும் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி தான். மீண்டும் 5 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சி தேர்தல் - பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்