சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஷியாமளா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு முகேஷ் மற்றும் மித்ரா என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் மோகன், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் சடலங்களை எரிக்கும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (பிப்.14) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. எனவே காதலித்து திருமணம் முடித்த மோகன் - ஷியாமளா தம்பதியும் மாலை பணிமுடிந்த பிறகு, மெரினா கடற்கரைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி, அன்று காலை வழக்கம்போல் மோகன் தனது பணிக்குச் சென்றுள்ளார்.
ஆனால், மாலை நேரத்தில் அதிகளவு பணி இருந்ததால் மெரினா கடற்கரைக்கு இன்று அழைத்துச் செல்ல முடியாது என ஷியாமளாவிடம் மோகன் மொபைல்போன் மூலமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷியாமளா, மோகன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சுடுகாட்டிற்குக் கையில் பெட்ரோல் கேனுடன் ஷியாமளா சென்றுள்ளார்.
அப்போது மோகனுடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷியாமளா, தன்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். மேலும், அவ்வாறு அழைத்துச் செல்லவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷியாமளா தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன், அருகிலிருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்துள்ளார். பின்னர் உடனடியாக 50 சதவீதம் தீக்காயம் அடைந்த ஷியாமளாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மோகன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு