சென்னை புளியந்தோப்பில் தனியார் நிறுவனம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குதான் தமிழ்நாட்டில் உள்ளது. வல்லுநர் குழு, மருத்துவக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படுகிறது. பள்ளி திறப்பு தொடர்பான எதிர்க்கட்சியின் கருத்து பரீசிலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
கழகங்களுடன் கூட்டணி இல்லை என்ற மக்கள் நீதி மய்யத்தின் முடிவு குறித்து பதிலளித்த அவர், “அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் பலம் அனைவருக்கும் தெரியும். அதிமுக எஃகு கோட்டை, மோதுபவர்களின் மண்டைதான் உடைபடும். கட்சி ஆரம்பித்துவிட்டதால் கமல் எதையாவது பேசிதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எம்ஜிஆர் படத்தை பாஜக பயன்படுத்துவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவனத் தலைவர், அவர் படத்தை பாஜக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல, பாஜக கட்சியில் ஏன் தலைவர்களே இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றார். "தமிழ்நாடு அமைதிப் பூங்கா. சாதி, மத, இன, மொழி சண்டை கிடையாது. சமத்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். கலவரம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனக் கூறினார்.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட இறுதி கேள்விக்கு பதிலளித்த அவர், “உச்ச நீதிமன்றத்தின் கேள்வியை கவனத்தில்கொண்டு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறோம். தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது, இனியும் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.