சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு வலது கால் மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மேல் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் 8 ஆம் தேதி உள் நோயாளியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடைய வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக முட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் ரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு நேற்று(நவ.15) பிரியா உயிரிழந்தார்.
இது குறித்த விசாரணையில், கவனக்குறைவாக மருத்துவர்கள் தவறாக அறுவ சிகிச்சை செய்ததால் மாணவி பிரியா உயிரிழக்க காரணம் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்தார்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் சாந்தி கூறுகையில், ”கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்பு காலில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டங்கள் குறைந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவின் கால் அகற்றப்பட்ட பின்பு உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து உயிரிழந்தார். ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் போன்ற இனை நோய்கள் எதுவும் இல்லாமல் சாதாரண அறுவை சிகிச்சைக்காக சென்று உயிரிழந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. இந்த சம்பவத்தில் கவனக் குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை” என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில்,” எதிர்பாராத விதமாக செல்வி பிரியா அறுவைச் சிகிச்சையின் போது இறந்துவிட்டார். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் மருத்துவர்கள் தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற ஒரு மருத்துவ இறப்பு நிகழ்ந்ததென்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
எந்த ஒரு மருத்துவரும் உயிரிழப்பு நேர்வதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். நல்ல நோக்கத்தில்சில ரிஸ்க் எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக இதுபோன்று நேரலாம். சில நேரங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்காக விதிமுறைகளை மீறும்போது இறப்புகள் நேர வாய்ப்புண்டு.
இதுபோன்ற நெக்லிஜன்ஸ்கள் நேரும்போது, அதனை மருத்துவ துறையில் இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். ஒன்று கிரிமினல் நெக்லிஜன்ஸ் மற்றொன்று சிவில் நெக்லிஜன்ஸ். இதில் மிக அரிதாகவே கிரிமினல் நெக்லிஜன்ஸ் நடைபெற வாய்ப்புண்டு. இதில்தான் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சிவில் நெக்லிஜன்ஸ் தொடர்பான விசயங்களில் துறை மற்றும் கவுன்சில் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.
பிரியா விவகாரத்தைப் பொறுத்தவரை பெரியார் நகரில் நடைபெற்ற அறுவைச்சிகிச்சையின் போதோ அல்லது மயக்கம் மருந்து கொடுக்கும்போதோ தவறு நேர்ந்திருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் அங்கிருந்து மாற்றம் செய்தபிறகு இதேபோன்ற தவறுகள் மூலமாக நடந்திருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் முழுமையான மருத்துவ அறிக்கைக்குப் பிறகு நாம் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. என்றாலும், சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். முதலில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்தனவா? அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் அந்த மருத்துவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்களா..? சில உயரதிகாரிகள் காப்பீடு மற்றும் சாதிக்க வேண்டுமென்பதற்காகவும் இது போன்று நடைபெற்றதா?
குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுபோன்ற அறுவைச் சிகிக்சை மேற்கொள்ளப்படுவது தேவையற்றது. சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை அவர்களால் மேற்கொள்ள முடியாது. தற்போதும் தமிழகத்தில் 200 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளுக்கு எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.
இது உயரதிகாரிகளின் தவறாகும். அதுபோன்று பிரியா விவகாரத்தில் நிகழ்ந்திருக்குமோ என விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதனை மறைப்பதற்கு மருத்துவர்கள் பலிகடாக ஆக்கப்படுகிறார்களா என்பதை விசாரிப்பதும் அவசியம்.
இதுகுறித்து முறையான விசாரணை நடைபெற வேண்டும். அதில் ஏதேனும் தவறு இருந்தால், சிவில் நெக்லிஜன்ஸ் இருந்தால், அவர்களுக்கு அந்த தவறுக்கு உரிய தண்டனையை அரசு வழங்க வேண்டும். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறுகிய கால இடைவெளியில் முழு விசாரணை செய்திருக்க முடியாது. ஆகையால் ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் சமூக அளவில் வரக்கூடிய அழுத்தங்களின் அடிப்படையில் யாரும் பலிகடா ஆக்கப்படக்கூடாது. இந்தியாவைப் பொறுத்தவரை சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். இதை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. விரிவான விசாரணைக்குழு அமைத்து இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பிரியா மரணம்: சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கும்படி காவல்துறை கடிதம்!