சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் தனது 83வது வயதில் இன்று (நவ.21) காலமானார். வயது முதிர்வின் காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் நோயாளிகளுக்குக் கண் மருத்துவச் சிகிச்சை அளிக்காமலிருந்து வந்தார். இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ, டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்படப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சென்னையில் 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி திருவல்லிக்கேணியில் சீனிவாசராவ், லட்சுமிதேவியின் மகனாக பத்ரிநாத் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் அவர் படித்தார். கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியில் 1955 முதல் 1957 வரையில் படித்து முடித்தார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1957 முதல் 1962ஆம் ஆண்டு வரையில் மருத்துவம் படித்தார். அப்போது கண் மருத்துவத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் பல்கலைக்கழகத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் 1962ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது பயிற்சியை முடித்தார். பின்னர், நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் பணியைத் தொடங்கினார். 1970களில் இந்தியா வந்த அவர் 1978ஆம் ஆண்டு வரை தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
1978ஆம் ஆண்டில், காஞ்சி காமகோடி பீடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, டாக்டர் பத்ரிநாத் மற்றும் சிலரது உதவியுடன் சென்னையில் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையைத் துவக்கினார். சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டு ஏழைகளுக்குக் கண் ஒளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் ஏழை எளியோருக்கான கண் மருத்துவ சேவைகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1983ஆம் ஆண்டும், பிசி ராய் விருதை 1991ஆம் ஆண்டும், 1999ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை 1995ஆம் ஆண்டும் பெற்றதுடன் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!