திரைப்பட நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின் தூதுவருமான திரிஷா, சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரிஷா, ”கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளது. இருப்பினும், இந்த வன்முறைகளை முற்றிலும் அகற்றப்படுவதற்கு இதுகுறிதத விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். கிராமப்புற பெண்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மென்மேலும் இது தொடரவேண்டும். குழந்தை பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளுக்கு தெரிந்த நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன.
இந்த மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அரபு நாடுகளில் உள்ளது போல உடனடியாக நிறைவேற்றப்படும் கடுமையான தண்டனைகளை இங்கேயும் கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்காக எதிரான வன்முறைகலை எதிர்த்து நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும். சமீபத்தில், வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வந்திருக்கிறது. அஜித் இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கு நான் மனதார பாராட்டுகிறேன்' என்று கூறினார்.