சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலகிரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (செப் 2) சென்றார். கடந்த ஒரு வார காலமாக நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் கொடுத்தும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியும் தனது விளக்கத்தையும் ஆதாரங்களையும் ஒப்படைத்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமானிடம் விசாரணை செய்வதற்காக சென்னையில் இருந்து ஐந்து தனிப்படைகள் கொண்ட போலீசார் குழு ஊட்டி விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, மோசடி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சீமான் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அந்த புகார் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்ததாக விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார். இந்நிலையில், அந்த வழக்குகள் மீது மீண்டும் விசாரணை நடத்தக் கோரி விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தார்.
மேலும், சீமானும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து தன்னை மிரட்டியும், தொந்தரவு செய்து வருவதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் விஜயலட்சுமி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "அரசியல் தலைவர்களுக்கும் ஒரு நீட் தேர்வு அமல் படுத்த வேண்டும்" - சீமான்
அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி நேரடியாக ஆஜராகி தனது விளக்கத்தையும் வாக்குமூலங்களையும் ஆதாரங்களையும் நேரடியாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், ஐந்து உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார் சீமானை கைது செய்வதற்காக ஊட்டி விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊட்டியில் விசாரனை: சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊட்டியில் முகாமிட்டு சீமானிடம் விசாரணை செய்த பிறகு கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று (செப் 2) நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சென்னை ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொய் புகார் அளிக்கும் விஜயலட்சுமி மீதும் வீரலட்சுமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுக்கள் அளித்தனர்.
அந்தப் புகாரில் விஜயலட்சுமி பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாகவும் இதன் காரணமாகவே சீமான் மீது பொய் புகார்கள் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக மதுரவாயில் காவல் நிலையத்தில் சுமார் 5 மணி நேரமாக விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது விஜயலட்சுமி தரப்பிடமிருந்து ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவைகளும் போலீசார் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் ஐந்து உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார் சீமானை கைது செய்வதற்காக ஊட்டி விரைந்து உள்ளதாகவும் அங்கு அவரிடம் விசாரணை செய்த பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு..பின்னணி என்ன..?