சென்னை: தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை குடியரசுத்தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சகம் சார்பாக வழங்கப்படும் பதக்கங்கள் மாநில அரசின் முதலமைச்சரின் பதக்கங்கள் என கிட்டத்தட்ட 280 பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (மே 27) வழங்கினார். இந்நிகழ்வு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு 2018, 2019, 2020, 2021 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்குவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக பதக்கப்பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின் பேரில், அவர்களும் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தோடு சென்னைக்கு வந்துள்ளார்கள்.
இவர்களால் முதல் நாளில் வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. ஏனென்றால், பிரதமர் வருகையை முன்னிட்டு அதிக கெடுபிடி இருந்தது. இதனால் குடும்பத்துடன் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய நிகழ்ச்சியில், எஸ்.பி. முதல் ஏ.டி.ஜி.பி வரை கிட்டத்தட்ட 60 பேருக்கு மட்டும் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார். மீதமுள்ளவர்களை 20, 20 குழுக்களாக பிரித்து ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்கள் பதக்கம் வழங்கியுள்ளார்கள்.
இதனால், கடைநிலை காவலர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதிலும், “இனி எப்போது நாம் முதலமைச்சர் கையால் பதக்கம் வாங்கப்போகிறோம்? பொண்டாட்டி பிள்ளைகளுக்கு எப்படி பதில் சொல்வது? ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கட்டளை இடுபவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர், களப்பணி ஆற்றிய எங்களுக்கு கருணை காட்டாதது ஏன்? இது நியாயமா? என மனக்குமுறலுடன் கூறுகின்றனர்.
அதேநேரம், நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து பதக்கம் வழங்கப்பட்டதால்தான் இந்த சிக்கல். ‘காவல்துறை நம் நண்பன்’ என்று சொல்லக்கூடிய விதத்தில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கூறிவிட்டு, இவ்வாறு காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது காவலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், முதலமைச்சர் ஸ்டாலினின் கீழ் தான் காவல் பணிகளின் நிர்வாகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொண்டர்களை கவனிக்க வேண்டும் - திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்