சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் ஆண்டு தேர்வினை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதேபோல 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழ்நாடு அரசு ரத்து செய்து அறிவித்தது.
இந்த நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நடப்பு 2021 -22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, பள்ளிகளில் ஜூன் 14ஆம் தேதி முதல் நடத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாடப்புத்தங்கள் மாணவர்களுக்கு நாளை முதல் வழங்குவதற்கும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. மாணவர்களுக்கான வகுப்புகள் கல்வித் தொலைக் காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா தொற்று தாக்குதல் மற்றும் 3ஆம் அலை முன்னெச்சரிக்கை காரணமாக முதலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கலாமா? எனவும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலை... குழந்தைகளுக்கான பிரத்யேக மையம்: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்