கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் விஸ்வநாதன் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன்,
"முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களின் மேற்பார்வையில் சுகாதாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பே எங்களது ஒவ்வொரு வெற்றிக்கும் காரணமாக உள்ளது. இது கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்பதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை அடுத்த ஒரு மாதத்திற்கு கடைப்பிடிக்க வேண்டும்.
தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தற்போதைய சூழலை மக்கள் உணராமல், அரசின் அறிவுரைகளை ஏற்க மறுப்பதே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சவாலாக உள்ளது. கரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை எண்ணி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை உதவியுடன் வழக்கு பதியப்படும். பல்வேறு அறிகுறிகள் உடையவர்களை கண்டறிந்து, அவர்களை பரிசோதனை செய்வதன் மூலம் நோயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
பொதுமக்கள் தங்களுடன் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டும். இதன்மூலம் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க முடியும்.
மாநிலத்தில் சமூகப்பரவல் நிச்சயமாக ஏற்படவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தனிமைப்படுத்தலை சீரான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,
"ஒருவருக்கு கரோனா என்றாலும் அப்பகுதியில் உள்ள மொத்த உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். நோய் தொற்று பரவல் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தவறான புரிதல் இருந்து வருகிறது.
தனிப்பட்ட மக்களுக்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளை தடுப்புகள் அமைத்து தனிப்பகுதியாக மாற்ற இயலாது. சமுதாயத்தில் தனியாக செயல்படுவதற்கு யாருக்கும் அரசு அனுமதி அளிக்காது .
முகக்கவசம் அணியாமலோ, தொற்றுடன் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்காமல் வெளியில் வருபவர்கள் மீது வேண்டுமென்றே நோய் பரப்ப முயற்சி செய்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்படுவர்.
முகக்கவசம் அணிதல் மற்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தலை பொதுமக்களிடையே தொடர்ச்சியாக எடுத்துரைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கென தனியாக சோதனை மேற்கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் தனியிடம் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பும் போது நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் திட்டத்தை முதல்வரின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி முதன் முறையாக தொடங்கியுள்ளது.
குணமடைந்தவர்களை பணிக்கு மீண்டும் எடுக்காமல் தவிற்கும் நிறுவனங்கள் மீதும், சான்றிதழ் வாங்கி வர வற்புறுத்தும் நிறுவனங்கள் மீதும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின்படி அந்தந்த நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும்" எனத் தெரிவித்தார்.