கடந்த காலங்களில் சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியதை நாம் அறிவோம். நிலத்தடிநீரை அதிகரிக்க வேறென்ன மாற்று முறையை மேற்கொள்ளலாம் என தடுமாறிவந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2002ஆம் ஆண்டு, நீரியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து 'மழை நீர் சேமிப்பு' என்ற திட்டத்தை அமல்படுத்தினார்.
பின்னர் இத்திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டது. தொடக்கத்தில் சென்னைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, மழை நீர் சேமிப்புத் திட்டம். ஆனால், மக்கள் படிப்படியாக, இத்திட்டத்தை அமல்படுத்தத் தவறிவிட்டனர் என்கின்றனர், நீரியல் நிபுணர்கள். இத்திட்டத்தை கண்காணிக்கும் துறையான சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையில் 2018-19ஆம் ஆண்டுகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. அந்த நேரங்களில் மட்டும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார்கள் என்கிறார்கள், நீரியல் நிபுணர்கள். மேலும் இந்தத் திட்டத்தை ஒரு அரசாங்கத் திட்டமாக பார்க்காமல் மக்கள் தானாகவே முன் வந்து, இந்த பணியை முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
மழைநீர் சேமிப்பு என்றால் என்ன?
மழை பெய்யாமல் அல்லது தண்ணீரை சேமிக்காமல் வீணாக்குவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இந்த நிலத்தடி நீர் மட்டத்தை செயற்கை முறையில் உயர்த்த நாம் சாதாரண நாட்களில் உபயோகிக்கும் தண்ணீர் வீணாகும்போது அதை, நீர்த்தேங்கக்கூடிய பகுதிகளில் தொட்டிகள், குழிகள் மற்றும் கிணறுகளுக்குள்ளே சென்றடையும்படி நீர் வழியை ஏற்படுத்த வேண்டும். மேலும், மழைக் காலங்களில் மழை நீர் தானாகவே இந்தத் தொட்டிகளில் சேகரிக்கப்படுவதால், நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயரும்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீரேற்றி, குடிநீர் விநியோகம் செய்யலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நிலத்தடி நீர் கைகொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.
இத்திட்டத்தின் படி வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும். இதே போல அரசு, தனியார் அலுவலகங்கள், கட்டுமானங்களில் மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும்.