சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சேட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், "தமிழ்நாட்டில் பல மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த ஓராண்டாக தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இப்பணியிடங்களை நிரப்பும் வரை, தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள், காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணிகளை மேற்கொள்ளும்படி சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது.
மேலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.