சென்னை: கொலம்பியா நாட்டில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் கொலம்பியா, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் உள்பட 42 நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியா சார்பில் 16 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேர் பங்கேற்றனர்.
இதில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஆனந்த் குமார் (18) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 59 ஆண்டுகளில் உலக அளவில் நடைபெறும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
இதையடுத்து கொலம்பியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் குமார், "நான் இரண்டாவது முறையாக உலக அளவில் நடக்கும் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டேன். போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
ஆனாலும் கடுமையாக போராடி வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளேன். 59 ஆண்டுகளில் உலக அளவில் ரோலிங் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தமிழ்நாடு வீரருக்கு வரவேற்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்ல கடுமையான பயிற்சி எடுப்பேன். தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் விளையாட்டை மேம்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பார்வதி அம்மாளை நேரில் சந்திக்கும் சூர்யா!