வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என்றும், நாளை முதல் வெப்பம் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.