சென்னை: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், வணிக வரித்துறை சார்பிலான சென்னை வடக்கு நிர்வாக கோட்டம் மற்றும் நுண்ணறிவு கோட்டத்தை சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கான சீராய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்த பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 61% வரி வருவாயும், பதிவுதுறையில் 71% வரி வருவாயும் அதிகரித்து உள்ளோம் என தெரிவித்தார். கடந்த ஆண்டில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்பொழுது கோட்ட வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கூட்டம் நடைபெற்றதை அடுத்து தற்பொழுது சென்னை வடக்கு கோட்டத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றுள்ளதா என்று தெரியவில்லை. இனி வரும் காலங்களில் இந்த துறையில் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர், வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஐம்பது விழுக்காடு மானிய விலையில் பாரம்பரிய விதை நெல் விநியோகம்