சென்னை: தமிழ்நாடு 16 சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான இன்றைய விவாதத்தில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையான என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாகவும், அதனை தெளிவு படுத்த வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் பதில்
அதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது, நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விஷயத்தை அவையில் எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பின்னர் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. இதை யாராவது மறுக்க முடியுமா நீட் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தான் என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும் கருணாநிதி முதலமைச்சரான பின்னர் தான் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நுழையாமல் செய்தார் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் உறுதி
இறுதியாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருகிறோம். அதிமுக, திமுக இணைந்து தீர்மானம் நிறைவேற்றினோம்; சட்ட மசோதா தாக்கல் செய்தோம். குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாவைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை அழுத்தமாக பிரதமரிடம் பேசி இருக்கிறோம்.
மாணவர்களின் உயிர் பிரச்சினை என்பதால் நீதிமன்றத்தில் முறையாக அனுகவுள்ளோம். ஒய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்று உறுதியாக உள்ளோம். நீட்டை ரத்து செய்ய முயற்சி செய்து வருகின்றோம், நிச்சயம் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்