இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1, 2 ஆவது ரீச்சுகளின் கீழுள்ள மறைமுகப் பாசனப் பகுதிகளில் பிசான சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் வேண்டுகோளினை ஏற்று மணிமுத்தாறு அணையிலிருந்து, மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1, 2 ஆவது ரீச்சுகளின் கீழுள்ள மறைமுக பாசனப்பரப்புகளுக்கு வரும் 12 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 79 நாள்களுக்குப் பிசான பருவ சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதன் வாயிலாக, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டம் ஆகிய வட்டங்களிலுள்ள 11,134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.