சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (நவ.29) காலை முதல் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
சென்னையில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100-அடி சாலை, போரூர் புறவழிச்சாலை, அண்ணா நகர் நிழற்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர், ஆவடி, திருமங்கலம், புதிய ஆவடி சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மிகுதியாக காணபட்டது.
குறிப்பாக, புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நேற்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நகரின் பல பகுதியில் 10 செ.மீ வரை மழை பதிவானது.
பொதுமக்கள் அவதி: சென்னை கொரட்டூர் வடக்கு நிழற்சாலை சிஎஸ்ஐ சர்ச் மழைநீரில் தத்தளிக்கிறது. மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால், குடியிருப்பு பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் இந்து முன்னணி அலுவலகம் எதிரில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் மக்கள் வெளியில் வரமால் அவதிப்பட்டனர். மேலும், நகரின் பல தாழ்வன பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நின்றன.
ரயில்கள் ரத்து: அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில், மங்களூர் சென்ட்ரல் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில், காவேரி விரைவு ரயில், பாலக்காடு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது.
மேலும், சென்ட்ரல் - அரக்கோணம் இடையே புறநகர் ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இது குறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில், சென்னை கோட்டத்தில் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றங்கள் செய்யப்படவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தயார் நிலையில் கமாண்டோ வீரர்கள்: கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழக கமாண்டோ வீரர்கள் படையானது, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், இதில் 57 பேர் கொண்ட குழு பிரிக்கப்பட்டுள்ளது.
படகுகள், லைஃப் ஜாக்கெட், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. மேலும், சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என முன்னதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: அஞ்சலகத்தில் பொது மக்களுக்கு இவ்வளவு திட்டங்களா? - முதுநிலை அஞ்சல் அலுவலர் விளக்கம்!