சென்னை வடபழனியில் தெற்கு பெருமாள் கோயில் தெருவில் 14 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் முதல் தளத்தில் வசித்துவருபவர்கள் ஜியாவுதீன் அகமது-நஸ்ரின் தம்பதி.
கோடைகால தண்ணீர் பிரச்னை காரணமாக, மாநகராட்சியில் இருந்து தண்ணீர் கிடைக்காததால், குடியிருப்பு வாசிகள் தனியார் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் அலுவலர் ராமசாமி தனியாரிடம் வாங்கும் தண்ணீருக்கு தன்னுடைய பங்கு பணத்தையும் தராமல், அந்த நீரை வீணாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதை தட்டிக்கேட்ட காரணத்தினால் ஓய்வுபெற்ற காவல் அலுவலர் ராமசாமி, ஜியாவுதீன் அகமதையும், அவரது மனைவி நஸ்ரினையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் நஸ்ரின் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் ராமசாமியை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் என்பதால் காவல் துறையின் பல்வேறு மட்டத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெண்ணை தாக்கிய ஓய்வுபெற்ற காவல் அலுவலர் ராமசாமி பணியின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.