சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக்கூறி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதாக தனியார் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கவும், லாரி உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தியும் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று லாரி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பேச்சுவார்த்தையில் மூன்று மாவட்டங்களுக்கு எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கும் அனுமதி பெறுவது தொடர்பாக, கனிம வளத்துறை செயலாளர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.