அனுமதி இல்லாமல் செயல்படும் தண்ணீர் கேன்கள் தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு முழுமையாக நூற்றுக்கணக்கான ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சீல் வைக்கப்படும் ஆலைகள் விஷயத்தில் அரசு அலுவலர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்து தண்ணீர் கேன் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஐந்தாம் நாளாக தொடரும் இந்த போராட்டத்தால் சென்னையில் போதிய கேன் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தண்ணீர் கேன் உரிமையாளர்கள் சொல்லும் முக்கிய காரணம் பல இடங்களில் முறையாக அனுமதி பெற்ற ஆலைகளையும் அலுவலர்கள் மூடி வருகிறார்கள் என்பதாகும். மேலும் அரசின் உத்தரவுப்படி ஆலைகளுக்கு முறையான அனுமதி வழங்க முயற்சிக்கலாம், அதனை விடுத்து ஒட்டு மொத்தமாக மூடும் நிகழ்வுகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள் என்பதால் கேன் தண்ணீர் தயாரிப்பாளர்களுக்கு என்ன தேவை என்பது அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கேன் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் என குடிநீர் கேன் தண்ணீரை நம்பியுள்ள பிற நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
![Water Cane Product Owners Association](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-special-story-of-ready-to-use-package-can-water-shortages-visual-7204894_02032020155018_0203f_01457_721.jpg)
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'அனுமதியில்லாத ஆலைகளை மூடவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை எடுப்பதை வரவேற்கிறோம் என்றாலும் கடந்த ஐந்து நாள்களாக வழக்கமாக விற்பனை செய்யப்படும் கேன் தண்ணீர் விலை அதிகரித்திருப்பது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பிரச்னைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்' என்கின்றனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கேன் தண்ணீர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்நிலையில் கடந்த ஐந்து நாள்களாக விலை அதிகரித்துள்ளது. சாமானியர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்!