சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பிரபல ரவுடியான புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இந்த வழக்கு குறித்து பட்டினப்பாக்கம் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார், முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ரவுடி எட்வின் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவரையும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று (செப்.04) காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஜான் கென்னடி பிரபல ரவுடியாக இருந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் பரிசீலனையின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்.. விரக்தியில் மனைவி தற்கொலை முயற்சி!
இந்த நிலையில், ஜான் கென்னடி தான், நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார் என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு தான் மேலும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் உண்மைத்தன்மை அனைத்தும் வெளிவரும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அரக்கோணம் ஜெயபாலுக்கு, தற்போது கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதையும் படிங்க: வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்.. விரக்தியில் மனைவி தற்கொலை முயற்சி!