இந்தியா அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணிவருகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுடன் சிறந்த வர்த்தகப் போக்குவரத்தை நடத்திவருகிறது. அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முறை சாரா உச்சி மாநாடு நடந்தது.
இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை செய்தனர். இந்தியா - சீனா இடையே எல்லை மீறல் பிரச்னை நடந்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோல ரஷ்யா - இந்தியா இடையே நல்லுறவு பல காலமாக நீடித்துவருகிறது. ரஷ்யாவானது இந்தியாவுக்கு பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்துவருகிறது. இந்நிலையில், மதுரையின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மதுரை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புடின் ஒரு விலங்குகள் பிரியர். தனது வீட்டில் பல்வேறு வகையான நாய்களை வளர்த்துவருகிறார். குதிரையேற்றம் உள்ளிட்ட வீர சாகசங்கள் புரிவதில் இவருக்கு அலாதிப் பிரியம். எனவே புடினை அலங்காநல்லூரில் நடக்கும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவைக்க மோடி விரும்புகிறாராம்.
எனவே ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண இந்தியா சார்பில் புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அலுவலர்கள் மட்டத்தில் இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிக்க: மோடி- சீன அதிபர் ஜின்பிங் வருகையால் காஸ்ட்லியான மாமல்லபுரம்!